ஜியாரத்திற்கு எதிரான தர்கா


நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த ஜியாரத்திற்கு எதிரான தர்கா !!

முதலில் ஒன்றை பதிவுசெய்கிறோம் : அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத,தடை செய்த வழிமுறையை தங்களின் வழிமுறையாக எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல்
அது இஸ்லாத்தில் உள்ளது தான் என்று அல்லாஹுடைய தூதரின் பெயரால் இட்டுக்கட்டி நியாயப்படுத்தப்படும் தர்கா வழிபாட்டை எதிர்கிறோமே ஒழிய அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களை நாம் ஒருபோதும் குறைசொல்ல முடியாது,குறை சொல்ல கூடாது. நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் சகோ.சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.

ஒருவரை நாம் நல்லடியாராக இருக்கக்கூடும் என்று சொல்வதாக இருந்தால் (உண்மையில் அல்லாஹ்வின் பார்வையில் அவர் நல்லடியாரா,இல்லையா என்பது நமக்கு தெரியாது அது வேறு விஷயம்) ஏதோ ஒரு நற்காரியம் அவர்செய்வதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த நற்காரியங்களை நாமும் செய்து அல்லாஹ்வை நெருங்க வேண்டும் நாமும் நல்லடியாராக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் நியாயமானது.

அந்த வகையில் நாகூர் சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களை பற்றி தர்கா விசுவாசிகள் சொல்லும்போது

“சாஹுல் ஹமீது பாதுஷா அவர்கள் நாகூர் வந்த பிறகுதான் நாகூரில் முஸ்லீம்கள் வந்தார்கள் அவர்களின் மார்க்க பிரச்சாரத்தால் தான் நம் பாட்டன், பூட்டன் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று இன்று நாமும் முஸ்லிமாக இருக்கிறோம் என்று சிலாகித்து சொல்கிறார்கள்”  அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

தீர்க்கமாக சொல்ல முடியாவிட்டாலும் நாமும் அதை ஏற்கிறோம் – அவர்கள் தாவா பணி செய்திருக்ககூடும் ஆனால் அதற்க்கு பகரமாக நாமும் தாவா பணி செய்வதா ? அல்லது அவர்கள் பெயரால் சந்தனக்கூடு,கந்தூரி விழா கொண்டாடுவதா ? முதலில் சிந்திக்க வேண்டுகிறோம்.

ஜியாரத் :
ஜியாரத் என்ற செயல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் தான் இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. இன்று முஸ்லீம்கள் பெரும்பாலும் ஜியாரத் என்ற சொல்லை விளங்கிய அளவுக்கு அதை ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். அதனால் தான் ஜியாரத்தின் பெயரால் இன்று பல மார்க்க விரோத செயல்கள் நடைபெறுவதை பார்க்கிறோம்.

ஜியாரத் செய்ய அனுமதி :
ஜியாரத் செய்ய அனுமதி : "அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் (1777)

"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதி (974)

மேற்கண்ட நபிமொழியில் ஜியாரத்தின் நோக்கம் “ஜியாரத் உங்களுக்கு மறுமையை நினைவூட்ட கூடியது என்று நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறுகிறார்கள்.

ஜியாரத் செய்வது எப்படி??

கப்ருகளை ஜியாரத் செய்வதாக இருந்தால் பொதுவான கப்ருகள்(பொது மையவாடி) இருக்கும் இடத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இறுதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)" பகீஉல் கர்கத் " பொது மையவாடிக்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம்

இது ஒரு வகை மற்றொன்டு இனைவைப்பாளர்களின் கப்ருக்குச் சென்று வருந்துதல் அவர்களுக்காக துஆ செய்யக்கூடாது.கீழ் வரும் செய்தியிலிருந்து அதை புரிந்து கொள்ள முடியும்.

நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.நபி(ஸல்)அவர்கள் நான் என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹ{ரைரா  நூல்: முஸ்லிம் 1622

இந்த இரண்டு வகை ஜியாரத்தான் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது.இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு மறுமை சிந்தனை மற்றும் மரண சிந்தனை அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.கப்ருகளைப் பார்க்கும் போது நாமும் மரணிக்கக்கூடியவர்கள் தான் நமக்கும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்று மரண சிந்தனை வரும்.அந்த அச்சம் அவனை தவறுகள் செய்வதை விட்டும் தடுக்கும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தன் வாழ்கையை அமைத்துக் கொள்ள உதவும்.
ஆனால் நம்முடைய சமூதாயம் இன்று கப்ரு ஜியாரத் என்ற பெயரில் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தால் நமக்கு மரண சிந்தனை வராது மற்றமாக தவறன சிந்தனைகள்தான் வரும்.ஏராளமான அனாச்சாரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றது.

கப்ரு ஜியாரத்தின் போது ஓதும் துஆ.

கப்ருகளை ஜியாரத் செய்யும் போது ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.அந்த துஆக்களை நாமும் கப்ருளை ஜியாரத் செய்யும் போது ஓதவேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.
என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.
(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)
அறிவிப்பவர்: அபுஹ{ரைரா (ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம் 367  எனவே இப்படிதான் நபியவர்கள் காட்டிய அடிப்படையில் கப்ருகளை ஜியாரத் செய்யவேண்டும்.

முன்சென்ற நல்லோர்களை நேசிப்பது,மதிப்பது என்றால் என்ன ?

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.
ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.
ஆனால் இன்று தர்கா என்ற பெயரில் நடக்கும் அத்தனையும் யூதர்களின் வழிமுறை அதை பற்றி பிடித்துக்கொண்டு தர்காவை எதிர்க்ககூடியவர்களை யூதர்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்கள் என்ன கொடுமை..

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

இது இணைவைப்பு வரை அவர்களை கொண்டு சென்றுவிட்டது – அல்லாஹ் எல்லோரையும் பாதுக்காக்கவேண்டும். ”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
 “செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:103, 104

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர். நூல் : அபூ தாவூத் 3512
நபிகளாரின் வழிகாட்டுதல்கள் இல்லாத செயலை மார்க்கம் என ஒருவர் செய்தால் அது நரகத்திற்கு அழைத்து சென்று விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபிஅவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள்  கூறினார்கள். (இப்னு மஸ்வூத்,ஜாபிர்(புகாரீ,நஸயீ, முஸ்லிம்)
பாவங்களிலேயே மிக பெரிய பாவமான அல்லாஹ்விற்கு இணை வைத்தல் என்ற ஒரு செயல் தர்காக்களில் அரங்கேறுகின்றன அவ்லியாக்களை அழைத்து பிரார்திப்பதனாலும்,அவர்களுக்காக நேர்ச்சை செய்வதன் மூலமும்.

அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)
 “மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

 அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்! (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)
“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்……(அல்குர்அன் 4:48)

அல்லாஹ் கூறுகிறான்: -
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”(அல்-குர்ஆன் 2:159)

“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்-குர்ஆன் 3:71)

மக்களே! சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள் எனது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களுடைய அல்லாஹ்வின் நூலையும் (திருக்குரான்) அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுசெல்கிறேன். நீங்கள் அவற்றை பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாடீர்கள். (முஸ்லீம் – 2334 ,இப்னு மாஜா -3074)