சமூக விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தற்கொலை செய்து கொண்டவருக்காகப் பிரார்த்திக்கலாமா?


முஸ்லிம்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்கூடமாகும். இதில் வசிக்கும் மாந்தர்கள் இவ்வுலக வாழ்வு எனும் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுச் சோதிக்கப்படுவார்கள். துன்பங்களைக் கண்டுத் துவண்டு போகாமலும், துயரங்களால் முடங்கிப் போகாமலும் இறைவனின் கருணையை எதிர் நோக்கிப் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் இறைவனைச் சார்ந்தே நிற்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் நிரந்தரமல்ல. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை அதனை இறைவன் கொசுவின் இறக்கைக்குத் தான் ஒப்பிடுகிறான். மறுமையின் நிலையான வாழ்வுக்கு முன்னால் அற்பமான இம்மை வாழ்வில் வரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு சஞ்சலம் அடையாமல் இறைவனின் உதவியை மட்டுமே எதிர்பார்த்து ஒரு முஸ்லிம் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அதனால் எந்தவொரு சோதனைக்கும் தற்கொலையைத் தீர்வாக இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. மாறாக தற்கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

'ஒரு மனிதருக்குக் காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ், ''என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான், எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1364)

மேற்கண்ட புகாரி. 1364வது ஹதீஸைப் போன்றே காயத்தின் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கீழ்வரும் (3062, 4204) கைபர் போர் சம்பவத்திலும் சொல்லப்படுகிறது. 

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி-ஸல் அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), 'இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்'' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி, 3062, 4204)

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 1365, 5778)

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுவதால், தற்கொலை செய்தவருக்காக மறுமையின் பலன் வேண்டிப் பிரார்த்தனை செய்வதிலும், அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதிலும் எவ்விதப் பயனும் இல்லை என்றறிக! அல்லாஹ் அப்படிப் பட்டதொரு மாபெரும் பாவத்தில் வீழாமல் நம் அனைவரையும் காத்தருள்வானாக!

புகை நமக்குப் பகை


நீங்கள் உங்களையே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
இஸ்லாத்தில் தற்கொலை செய்துக் கொள்வது நிரந்தர நரகத்தைத் தேடித்தரும் பாவம் என்பதை அனைவரும் அறிந்ததே. இன்று விஷம் சாப்பிட்டு நாளை இறந்து போனாலும் அதை தற்கொலையாகவே நாம் கருதுவோம். அதே போல மெதுவாக கொல்லக்கூடிய விஷம் (Slow poision) சாப்பிட்டு வாரம், வருடம், 10 வருடம் அல்லது 30 வருடம் சென்று இறந்து போனாலும் நாம் இதை தற்கொலையாகவே கருதுவோம். சிகரெட் புகைப்பதால் மனிதன் தன் வாழ்நாளை மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொள்கின்றான் என்பது விஞ்ஞானத்தில் நிறூபிக்கப்பட்ட உண்மை.
ஆனால் நின்று கொல்லக் கூடிய சிகரெட், இஸ்லாமிய சமுதாயத்திலும் மற்றவர்களிடமும் புத்துணர்வு ஊட்டும் மருந்தாக கருதப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. எனவே மனித சமுதாயத்தில் குறைந்தது ஒரு நபரையாவது இக்கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
சிலர்களது கருத்து சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதாகும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இது ஒரு நவீனக் கலாச்சாரம் என நினைக்கிறார்கள். ஒரு சிகரெட் பலர் பகிர்ந்து தங்கள் சகோதரத்துவத்தை(?!) வெளிப்படுத்துகிறார்கள். பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ சிகரெட் தேவைப்படுபவனுக்கு தாராளமாக பாக்கெட்டை நீட்டுகிறார்கள். குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்க புகைப்பழக்கம் ஒரு பக்கபலம் என்று நினைப்பவர்கள் அதிகம். இன்னும் சிலர் காலையில் இது இருந்தால்தான் மற்ற கடமைகள் என்கிறார்கள். இவையெல்லாம் மனதளவில் ஏற்படும் மாயை என்பதில் இவர்களுக்கே சந்தேகமில்லை. இவர்கள் தெரிந்து கொண்டே தங்களை அழிவின் பக்கம் தங்களை நகர்த்துகிறார்கள்.
நான் செயின் ஸ்மோக்கர் என்றும் நாளொன்றுக்கு எனக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்று சிலர் பெருமையாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ நான் நினைத்தால் இப்பழக்கத்தை இன்றே நிறுத்திவிடுவேன், நான் ஒன்றும் இதற்கு அடிமையல்ல ஏதோ ஓய்வு நேரத்தில் மன ஆறுதலுக்கு புகைக்கின்றேன் என்கிறார்கள். உண்மையில் இவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைகளே.
இது போன்ற புகைப்பழக்கத்திற்கு பலர் அடிமையாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்கள் யார் என ஆராய்ந்தால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை என்று கூறலாம். புகைபிடிப்பதால் உற்சாகமாய் சண்டையிடும் காட்சிகள், புகைப்பிடிப்பதைக் கண்டு காதல் வயப்படும் பெண்கள், சோக மற்றும் சந்தோஷ சந்தர்ப்பங்களில் புகைப்பிடித்தல் சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவை சின்னத்திரையும் வெள்ளித்திரையும் தவறாமல் இடைச்செருகல் செய்ததன் விளைவு 15 முதல் 19 வயது வரையுள்ளவர்களின் மனதில் புகைப்பழக்கம் ஒரு சிறந்த பழக்கம் என்ற தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.
இதனால் ஆரம்பத்தில் ஜாலிக்காக ஆரம்பிக்கின்ற ஒருவர் காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இப்பழக்கத்திற்காக ஒரு தொகையை தினமும் செலவழிக்கின்றார். இப்பழக்கம் சற்று அதிகமாகி போதைப் பொருட்களைத் தேட ஆரம்பிக்கின்ற சிலரும் உண்டு. சமீப காலங்களாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிகமாக கைது செய்யப்படுகின்ற இடம் கல்லூரி வாசல்களாகவே இருக்கின்றன. இனியாவது தணிக்கைத்துறை சினிமாவில் இது போன்ற காட்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்யது வருங்கால இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர வழி வகுக்கட்டும்.
இத்தீய புகைபழக்கத்தின் காரணமாக தான்மட்டும் தீமையைத் தேடிக்கொள்ளாமல் 'யான் பெற்ற இன்பம்(?!) பெறட்டும் இவ் வையம்' என்பதற்கினங்க அருகில் இருப்பவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கிறான். இதைத் தடுக்க தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள், பேருந்துகள், வணக்கத்தலங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், புகைத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது. எனினும் இந்த அரசுகள் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்க முன்வராததன் நோக்கம் என்னவென்று பார்த்தால் அரசு கஜானாவை அதிகமாக நிரப்புவதில் புகையிலைச் சுங்கவரி பெரும்பங்களிப்பதே ஆகும்.
விற்பனைக்குத் தடைவிதித்தால் அதன் உற்பத்தியாளர்களும், விற்பனைதாரர்களும் மற்றும் அதையே தொழிலாக மேற்கொண்டு வாழ்வை நடத்திவரும் மக்களும் சாலைமறியல், உன்ணாநோன்பு போன்ற போராட்டங்களில் இறங்குகிறார்கள். வீர வசனங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடும் அரசியல் வாதிகள் உயிர்களை அழிக்கும் இத்தொழிலை முடக்கி ஆக்கப்பூர்வமான பல தொழிற் சாலைகள் திறக்க முன் வருவார்களா?
கருத்துக்களும் ஆய்வுகளும்
உலக சுகாதார மையம் (World Helth Organization) கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.
2050-ஆம் ஆண்டு வாக்கில் எய்ட்ஸின் மூலம் எவ்வளவு மக்கள் இறக்க நேரிடுமோ அதேபோன்று இந்த கேன்ஸர் மூலமும் இறக்க நேரிடும் என்கிறார்கள். தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கும் விஷயம் தற்போது மட்டும் உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய நாடுகளானது புகையிலை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகுக்கின்றன.
புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.
சீனாவில் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 70 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். சீனாவில் சுமார் 30 வயதுகளில் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகைபிடிப்பதால் ஏற்படும் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவராகவே உள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தில் இருக்கும் 80 சதவித புகைபிடிப்பவர்கள் தங்கள் 20 வயதுக்கு முன்பே இப்பழக்கத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.
பெருவாரியான நகரங்களில் புற்றுநோய் மையங்கள் பரவலாகத் தோன்றுவதற்குக் காரணம் கேன்ஸர் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பதேயாகும். யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கேன்சரின் ஒருவகை பாதிப்பைத்தான் கீழ்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!
பி.பி.ஸி செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது, இங்கிலாந்தில் புகைப்பிடிக்கும் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்மையிழந்தவர்களின் எண்ணிக்கை 120,000. பெரும்பாலானோர் இதை அறியாமலே செய்கிறார்கள். மேலும் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பிறக்க நேரிடுகின்றன.
புகைப்பழக்கமும் ஆரோக்கியத்தின் பாதிப்பும்
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. இதயம் பாதிப்பு, புற்று நோய், நுரையீரல், முகத்தோல் சுருக்கம், குடலில் ஏற்படும் அல்சர், பற்களில் பாக்டீரியாக்களின் தாக்குதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு, ஆண்மையிழப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணியாக அமைகிறது.
மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை எந்த ஓய்வும் எடுக்காமல் இடைவிடாது வரையறுக்கப்பட்ட விதத்தில் அனிச்சையாக இயங்குகின்ற உறுப்புகள் எனப் பார்த்தால் நுரையீரல் மற்றும் இதயம். புகைப்பழக்கத்தின் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாவதும் இவையேதான்.
நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)
புகைபிடித்தலினால் முதலில் பாதிப்படையும் பகுதி நுரையீரல் தான். காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் விரிந்தும், வெளியிடுவதால் சுருங்கியும் செயல்படுகிறது. ஆக்ஸிஜனை கிரகித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. புகைபிடிப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மோனாக்ஸைடு துகள்கள் நுரையீரல் பகுதியில் படிந்து கட்டிகளாக மாறுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு காசநோய் (Tuber Classes) ஏற்படுகிறது. காலப்போக்கில் நுரையீரல் ஜவ்வுகளில் சிறிய துளைகளை இக்கட்டிகள் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் சிறிய பைகளில் துளைகள் ஏற்படுத்தும் இந்நோயை (Pulmonary Emphysema) என்று அழைக்கின்றனர். இந்நோயிற்கான அறிகுறிகள் உடல் இளைத்தல், தூக்கமின்மை, காசம், வாழ்வில் தன்னம்பிக்கை இழைத்தல் ஆகியவை என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.
இரத்தப் புற்றுநோய் (Blood Cancer)
நுரையீரலுக்குள் வரும் காற்றுதான் இதயத்திற்குச் சென்று ரத்தத்தைச் சுத்தம் செய்து ஆரிக்கிள்ஸ், வெண்ட்ரிகிள்ஸ் மூலமாக சுத்த இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. புகைப்பதினால் ஆக்ஸிஜனோடு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுத்தமான ரத்தத்தோடு கலக்க நேரிடுகிறது. இதன் விளைவு இதயத்துடிப்பு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை விட கார்பன் மோனாக்ஸைடின் விஷத்தன்மை அதிகமாகும். புகைபிடிப்பதால் இந்த விஷவாயுவானது நுரையீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. இது ஆக்ஸிஜன் பரவுவதைவிட அதி விரைவாக இரத்த நாளங்கள் மூலமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. ஆக்ஸிஜனின் அடர்த்தியை விட கார்பன் மோனாக்ஸைடின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இரத்தத்திலுள்ள செல்களைச் சுற்றி இது படர்கிறது. இது போன்ற பாதிக்கப்பட்ட செல்கள் பிளவுபட்டு பிளவுபட்டு கட்டிகளாக உருவாகிறது. இக்கட்டிகளை முற்றிலுமாக அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்குவது மிகவும் சிரமமான ஒன்று. நவீன கதிர்வீச்சு முறையில் இதை அழித்தல் என்பது அதிகப்படியான செலவுகளுக்கு வழிவகுக்கும்.
எலும்புருக்கி நோய் - லூக்கேமியா (Leukemia)
மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் சுமார் 7,000 முதல் 25,000 வரை இரத்த வெள்ளையணுக்கள் அடங்கியுள்ளன. இந்த வெள்ளையணுக்களின் மிக முக்கியமான செயல் நோயை எதிர்ப்பதுதான். மனித உடலில் இதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. இரத்த சுழற்சியின் காரணமாக இவை புதிப்பித்துக் கொண்டே இருக்கும். புகைபிடித்தலின் மூலமாக பாதிக்கப்படுகின்ற இவ்வகைச் செல்கள் எலும்புகளின் ஓரங்களின் தங்கி பிளவுபட்டு கட்டிகளை உருவாக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் 50,000 வரை உள்ளன. இவை எலும்புகளின் வலுத்தன்மையை இழக்கச் செய்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே மரணத்தை முத்தமிட்டு விடுகிறார்கள்.
குடல் நோய்கள் (Stomach Ulcers)
உள்ளிழுக்கின்ற புகையில் கலந்திருக்கின்ற மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் துகள்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து குடல் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது குடலில் ஜீரணிப்பதற்காக சுரக்கின்ற என்ஸைம்களுடன் இணைந்து அதன் இயற்க்கைத் தன்மையை மாறச் செய்கின்றது. இதனால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி குடலுறிஞ்சிகளை அழிக்கின்றன. இதனால் குடல் பாதிப்படைகிறது. சில சமயம் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல் வளர்ச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் படபடப்புத்தன்மை (Hyper Tension)
ஆரோக்கியமான ஒவ்வொறு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தின் பருப்பொருளாக ஹீமோகுளோபின், பிளாஸ்மா, குளுக்கோஸ், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் இதர பொருட்கள் இருக்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இவ்வாறு இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கூடுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தமும் படபடப்புத்தன்மையும் ஏற்படுகிறது.
தசைச் சுருக்கம்
இரத்தத்தில் இது போன்று ஆக்ஸிஜன் குறைந்து கார்பனின் அளவு கூடும் போது தோலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் புரோட்டீனின் அளவு குறைகிறது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. விளைவு கண்களைச் சுற்றிலும் உள்ள மெல்லிய தசைகளிலும் மற்றும் கன்னங்கள், உதடுகளின் தோல் சுருங்கி வரிகள் போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்களின் முகம் எப்பொழுதும் வரண்ட நிலையிலேயே காணப்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள் தோற்றத்தை மிகவும் விரைவிலேயே பெற்று விடுகிறார்கள்.
பற்கள் பாதிப்பு மற்றும் வாயில் ஏற்படும் அலர்ஜி
புகையை உள்ளிழுத்து வெளியிடுவததால் இவர்களின் உதடுகளின் தோல்களின் மெலேனியம் பாதிப்படைந்து கருக்கின்றன. பற்களின் உள்ளும் புறமும் நிக்கோடின் படிவதால் பற்கள் மஞ்சள் நிறமடைந்து விகாரமாகின்றன. காலப்போக்கில் பற்களின் நிறம் நிரந்தரமாக கருப்பாக மாறுகிறது. மேலும் நிக்கோடின் படிவதால் பற்களில் உள்ள கால்சியம் குறைகிறது, பற்களின் ஈறுகளில் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களின் வலுத்தன்மையை இழக்க வைக்கின்றன.
மேலும் இத் தீய பழக்கம் மண்ணீரல், கல்லீரல், நரம்புத்தளர்ச்சி, கடுங் குளிர்காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியமாக அமைகிறது.
வீண் விரையம்
புகை பிடிக்கின்ற ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள். மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வீண்விரையம் செய்கிறார்கள் என ஒரு நிமிடம் தாங்களே கணக்கிட்டுப்பார்த்தால் அவர்களே வியக்கும் வகையில் வீண்விரையம் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சராசரியாக 30 வருடம் புகைப்பிடிக்கும் மனிதர்கள் தனது வாழ்வில் கீழ்கண்டவாறு சிகரெட்டிற்கு செலவழித்திருக்கிறார்கள்.
சராசரியாக புகைத்த ஆண்டுகள் சராசரியாக 1 நாளைக்கு புகைபிடிக்க ஆன செலவு மொத்தம் கரியாக்கிய ரூபாயின் மதிப்பு 30 ஆண்டுகள் 10 ரூபாய் 1,09,800.00 ரூபாய் 30 ஆண்டுகள் 25 ரூபாய் 2,74,500.00 ரூபாய் 30 ஆண்டுகள் 50 ரூபாய் 5,49,000.00 ரூபாய்
இதுவல்லாமல் புகைத்ததால் வந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க செலவழிக்கும் ரூபாய்கள் மேற்குறிப்பிட்ட லட்சங்களைத் தாண்டிவிடும்.
எனவே நீங்கள் இதற்காகச் செலவழிக்கும் பணத்தை உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாமே. தர்மம் செய்தால் கூட மறுமையில் ஒன்றுக்கு பல மடங்காகப் பெறலாம் என்பது உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?
சிந்தித்து நல்லறிவு பெரும் மக்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையே போதுமானதாகும். அன்புச் சகோதரர்களே இத்தீய பழக்கத்திலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
மேலும் கூறுகின்றான் எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் 4:30)

மீலாது கொண்டாட்டம் ஓர் இஸ்லாமிய பார்வை


பிறத்தல், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்ற அர்த்தம் தரும் ‘மீலாது’ என்கின்ற பதப் பிரயோகம்,  ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்’என்ற பெயரில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அரங்கேற்றப்படுகின்ற பண்டிகைக்கே முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மீலாது விழா குறித்து நோக்குவோம்.
பரிபூரணப்படுத்தப்பட்ட இறைமார்க்கம்
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘அழ்ழாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம். (அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு ‘இது ‘நஹ்ர்’ உடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபியவர்கள், ‘இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்! அழ்ழாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களது இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும், உங்கள் செல்வங்களும், உங்களது மானமும், உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே’ என்று கூறிவிட்டு, ‘(நான் வாழ்ந்த இதுகாலம் வரை உங்களிடம் இறைச் செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘ஆம் (தெரிவித்துவிட்டீர்கள்)’ என்று பதிலளித்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! நீயே சாட்சி என்று சொன்னார்கள்.’ பிறகு (மக்களிடம்) ‘இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை(ப் பிறருக்கு)த் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர் தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-7078)
குறித்த ஆதாரபூர்வமான நபிமொழி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மார்க்கத்தில் மிகச் சிறியதொரு விடயத்தைக் கூட விட்டு வைக்காது இறைச்செய்திகள் அனைத்தையும் எத்தி வைத்துவிட்டார்கள் எனக்கூறுகின்றது.
மீலாது, மௌலீது போன்ற அநாச்சாரங்கள், புதுவழிகள் மார்க்க அங்கீகாரம் பெற்ற விடயம் என ஒருவர் நம்புவாராயின் நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், மீலாது, மௌலீது போன்ற மார்க்கத்தில் உள்ள விடயங்களை நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்லாது விட்டுவிட்டார்கள் என்பகவும் ஆகிவிடும். மேலும், அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)
மீலாது, மௌலீது போன்ற விடயங்கள் மார்க்க அம்சம்தான்  என வாதிடும் போது, மேலுள்ள திருமறை வசனத்தையும் மறுத்த பாவிகளாக ஆவதோடு, மார்க்கம் முழுமைப்படுத்தப்படாதது என்று கூறுகின்ற பெரும்பாவத்தில் ஈடுபட்டவர்களாகின்றோம். (இவ்வாறு வாதிடுவதிலிருந்து அழ்ழாஹ் எம்மனைவரையும் காப்பாற்றுவானாக!)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அவசியம்
ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்காத வரை அவனுடைய ஈமான் பூரணமடையாது. இது குறித்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’  (அல்குர்ஆன் 33:06)
இது குறித்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை,  ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார் என்று  அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-15)
நபிகளாரை எவ்வாறு நேசிக்க வேண்டும்?
அழ்ழாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் ஒரு விடயத்தை மார்க்கம் என்று தீர்மானித்து விட்டால் அதில் கூட்டல், குறைத்தல் செய்யாது, சுன்னாக்களை சில்லறைகள் என்று கூறி அற்பமாகக் கருதாது வஹியை மாத்திரம் பின்பற்றுவதே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதாக அமையும்.
திருமறைக் குர்ஆன் கூறுகின்றது. ‘நம்பிக்கை கொண்டோரே!  நீங்கள் அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அழ்ழாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.’  (அல்குர்ஆன் 4:59)
மேலும், அருள்மறையாம் திருமறை கூறுகின்றது.
‘நீங்கள் அழ்ழாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அழ்ழாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அழ்ழாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 3:31)
‘அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அழ்ழாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம், கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.’ (அல்குர்ஆன் 24:51)
மீலாது விழாவின் தோற்றம்
இஸ்லாமிய வரலாற்றில், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலம் முதல் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை மீலாத் விழா கொண்டாடப்படவில்லை. ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் தாங்கள் ‘பாத்திமா (ரழி) அவர்களின் பரம்பரையினர்’ எனப் போலியாக வாதிடக் கூடிய, அலி (ரழி) அவர்களே ‘நபித்துவத்திற்கு தகுதியானவரர்கள்’ என்றும், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபித்தோழர்களை விட ஏனைய நபித்தோழர்களை காபிர்கள் எனவும் வாதிடக்கூடிய ‘பாத்திமிய்யாக்களினால்’  எகிப்தில் ஆட்சி நிறுவப்படுகின்றது. ‘அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ்’ என்கின்ற யூதனின் சந்ததியினரே இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களை தம்பக்கம் கவர்வதற்காகவும், தமது ஆட்சி, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பாத்திமிய்யாக்களின் நான்காவது ஆட்சியாளனான ‘அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி’ என்பவனால் அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பெயரிலும், பாத்திமா (ரழி), அலி (ரழி), ஹுசைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோரின் பெயரிலும், ஆட்சியாளர் ஹாழிர் (பாத்திமிய்யாக் களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஹிஜ்ரி 230ல் பிறந்து இன்று வரை மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்) என்பவர் பெயரிலும் மீலாத் விழா (பிறந்த நாள்)  கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.
எனவே, இந்த மீலாத் விழாக் கொண்டாட்டங்கள், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் தோற்றுவிக்கப் பட்டவையேயன்றி அழ்ழாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
பிற மதக் கலாசாரத்திற்கு ஒப்பாதல்
பிறந்த நாள் கொண்டாட்டம் இறைமார்க்கத்தில் வரம்புமீறிச் சென்ற கிறிஸ்துவ சமுதாயத்தினரின் கலாசாரமாகும்.
‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தை சார்ந்தவரே என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவுத்-4033)
மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது மீலாத் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய மீலாத் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.
மீலாது கொண்டாட்டம் வழிபாடல்ல! வழிகேடு!
சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித கூட்டலும், குறைத்தலும் இன்றி தனது தூதுத்துவப் பணியை மிகச் சரியாக நிறைவேற்றிய அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மீலாது கொண்டாட்டம் மார்க்கத்தில் உள்ள விடயமாக இருந்திருந்தால், நிச்சயமாக அதனை நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள். ஆனால், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கோ, தமக்கு முன்சென்ற இறைத் தூதர்களுக்கோ மீலாது விழாக் கொண்டாடவுமில்லை. கொண்டாடுமாறு கட்டளையிடவுமில்லை.
மேலும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ‘சிறந்த தலைமுறை’ என சிலாகித்துக் கூறப்பட்ட உத்தம நபித்தோழர்கள் காலத்திலோ, அதற்கடுத்து வந்த தலைமுறையினர்களது காலத்திலோ மீலாது விழா என்கின்ற அநாச்சாரம் இருந்ததில்லை. இதோ அழ்ழாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
‘உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.’ இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.(அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2651)
மீலாதும் நரக நெருப்பும்
மீலாத் விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதானது இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.
‘உங்கள் மார்க்கத்தை அழ்ழாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ (அல்குர்ஆன் 49:16)
அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அழ்ழாஹ்விற்கும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் பாடம் கற்பிப்பது போன்று, (அழ்ழாஹ் இத்தகைய செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக!) இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாது கொண்டாட்டம் எம்மை நிச்சயமாக கொழுந்து விட்டெறியும் நரக நெருப்பிலேயே கொண்டு போய்ச் சேர்க்கும்.
இதோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.’  (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
இன்று இம்மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஊர்மட்டங்களில் வழக்கொழிந்து போய்விட்டாலும் கூட பாடசாலை மட்டங்களில், இஸ்லாத்தின் இனிய போதனைகள் விதைக்கப்பட வேண்டிய மாணவப் பருவத்தினரின் பிஞ்சு நெஞ்சங்களில் மீலாது எனும் அநாச்சாரமும், அந்நிய சமூகங்கள் மீது, மோகத்தை ஏற்படுத்தும் இத்தீய கலாசாரமும் விதைக்கப்படுவதையிட்டு பொறுப்பாளர்களும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் மாணவ சமூகமும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இறுதியாக, மீலாத் விழாவை ஆதரிக்க கூடிய சகோதரர்களே! நீங்கள் உண்மையில் அழ்ழாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்க கூடியவர்களாயிருந்தால், இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்ட மீலாத் விழா போன்ற அனாச்சாரங்களை விட்டொழித்துவிட்டு, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை முறை எவ்வாறு இருந்தது? நோன்பு மற்றும் பெருநாள் வணக்கங்களில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? பிரார்த்தனையின் போது தூதரின் வழிமுறை எவ்வாறு இருந்தது? அன்றாட நடவடிக்கைகளில்  தூதர் (ஸல்) அவர்களது வழிமுறை எவ்வாறு இருந்தது? என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அற்பமானது, சிறியது, பெரியது எனக் கருதாது அருள்மறைக் குர்ஆன், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் அறிந்து பின்பற்றுவதனூடாக தூதர் (ஸல்) அவர்கள் மீதான உண்மையான நேசத்தை வெளிப்படுத்துவோமாக!