இஸ்லாத்தில் உழைப்புக்கான முதல் வரையறை அது ஹலாலானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.
''அல்லாஹ் தனது அடியான் ஹலாலைத் தேடி உழைப்பதை - முயற்சிப்பதை பெரிதும்
விரும்புகின்றான்'' என்றார்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள். (தபரானி)
தபரானி பதிவு செய்துள்ள மற்றுமொரு ஹதீஸ் பின்வருமாறு:
''ஹலாலைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்''
ஒருவர் ஹலாலான வழியில் தனக்குரிய வருமானத்தைத் தேடிக்கொள்வதற்கு இஸ்லாம் பல வழிகளைக் காட்டித்தந்துள்ளது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான மார்க்க வரையறைகளை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருத்தல் வேண்டும். குறிப்பாக வியாபாரிகள், வாணிப முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் வர்த்தக, வாணிப சட்டங்களை அறிந்திருப்பது கட்டாயக் கடமையாகும். அப்போதுதான் அவர்கள் தொழில் நடவடிக்கைகளை மார்க்க அடிப்படையில் செல்லுபடியானவையாக அமைத்துக் கொள்ளலாம். இல்லாதபோது அவர்களின் தொழில் நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாக மாறி, அதனால் பாவம் விளைவதுடன் அவர்களின் உழைப்பும் ஹராமானதாக மாறிவிடும் ஆபத்து ஏற்படலாம். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிலவேளைகளில் சந்தைக்குச் சென்று தனது சாட்டையினால் சில வியாபாரிகளை அடித்து பின்வருமாறு கூறுவார்கள்:
''(வாணிபச் சட்டங்களைப் பற்றி) விளக்கம் உள்ளோரைத் தவிர மற்றவர்கள் எமது சந்தையில் வியாபாரம் செய்யக்கூடாது. ஏனெனில் அத்தகையவர் விரும்பியோ விரும்பாமலோ வட்டியை உட்கொள்ள வேண்டியிருக்கும்.''
வியாபாரம் உட்பட அனைத்து வர்த்தக, வாணிப, கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளிலும் ஒரு முஸ்லிம் தவிர்க்கவேண்டிய அம்சங்களுள் வட்டி பிரதானமானதாகும்.
ரிபா எனும் வட்டியைப் பற்றிப் பேசுகின்ற வசனங்கள் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில வசனங்கள் ஸூறதுல் பகராவிலும் ஏனைய வசனங்கள் முறையே ஸூறா ஆல இம்ரான், ஸூறதுன் நிஸா, ஸூறதுர் ரூம் ஆகிய அத்தியாயங்களிலும் காணப்படுகின்றன.
அல்குர்ஆன் வட்டியை நான்கு கட்டங்களில் ஹராமாக்கியது. முதல் கட்டமாக ஸூறா அர்ரூம்மின் 39 ஆம் வசனம் இறங்கியது.
''மனிதர்களுடைய பொருட்களில் (சேர்ந்து உங்களின்; பொருட்களும்) பெருகி வளர்வதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கின்றீர்களே அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளர்வதில்லை. (மாற்றமாக) அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி ஸக்காத்திலிருந்து எதை நீங்கள் கொடுக்கின்றீர்களோ (அது அல்லாஹ்விடத்தில் பெருகி வளரும்) இத்தகையோர்களே (தமக்குரிய கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவர்.''
இரண்டாம் கட்டமாக ஸூறதுன் நிஸாவின் 160, 161 ஆம் வசனங்கள் இறங்கின.
''எனவே, யூதர்களாக இருந்த அவர்களின் அநியாயத்தின் காரணமாகவும் மேலும் அவர்கள் பலரை அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுத்ததன் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல நல்லவைகளை நாம் அவர்களுக்கு ஹராமாக்கினோம். மேலும் வட்டியை அவர்களுக்குத் தடுத்திருந்தும், அவர்கள் அதனை வாங்கி வந்ததன் காரணமாகவும் மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டுவந்ததன் காரணமாகவும் (அவர்களுக்கு பல நல்லவற்றை ஹராமாக்கினோம்.) அவர்களில் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.''
ஸூறா ஆல இம்ரானின் 130 முதல் 134 வரையுள்ள வசனங்கள் மூன்றாம் கட்டமாக இறங்கின.
''ஈமான் கொண்டவர்களே! இரட்டிப்பாக, பன்மடங்காக வட்டி உண்ணாதீர் கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.மேலும் நரக நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது எத்தகையது என்றால் நிராகரிப்போருக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பைப் பெறுவீர்கள். உங்கள் இறைவனின் மன்னிப்பின்பாலும் வானங்கள், பூமியின் அளவு விசாலமான சுவனத்தின்பாலும் விரைந்து செல்லுங்கள். அது பயபக்தியுடையோர் களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகையோர் என்றால் செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள். கோபத்தையும் அடக்கிக் கொள்ளக்கூடியவர்கள். மனிதர்களை மன்னித்துவிடக் கூடியவர்கள். அல்லாஹ் (இத்தகைய) நன்மை செய்வோரையே நேசிக்கின்றான்.''
வட்டியைத் தடைசெய்து நான்காம் கட்டமாக இறங்கிய வசனங்கள் பின்வருமாறு:
''வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் நினைவிழந்தவன் எழும்பு வது போலன்றி (மறுமையில்) வேறு விதமாக எழமாட்டார்கள். அந்த நிலைக்கு அவர்கள் ஆளானது, நிச்சயமாக ,வியாபாரம் வட்டியைப் போன்றதுதான் என அவர்கள் கூறியதால்தான். மேலும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான். ஆகவே, எவருக்கு தனது இறைவனிடமிருந்து (வட்டியைக் கண்டித்து) உபதேசம் வந்து அவர் அதனை விட்டும் விலகிக் கொண்டாரோ (அவர் அதற்கு) முன் (வாங்கிச்) சென்று போனது அவருக்குரியதே. அவரின் விடயம் அல்லாஹ்வின்பாற்பட்டதாகும். (இக்கட்டளை கிடைத்த பின்) எவர்கள் (வட்டியின்பால்) திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்;கியிருப்பார்கள்.''
இது ஸூறதுல் பகராவின் 275 ஆம் வசனமாகும். இந்த ஸூறாவின் அடுத்து வரும் ஆறு வசனங்களும் தொடர்ந்து வட்டி தொடர்பாகவே பேசுவதைப் பார்க்கின்றோம்.
''அல்லாஹ், வட்டியை (அதில் எவ்வித அபிவிருத்தியும்-பரகத்தும் இல்லாது) அழித்துவிடுவான். மேலும் தர்மங்களை, அபிவிருத்தியைக் கொண்டு வளரச் செய்கின்றான். மேலும், பாவியான நிராகரித்துக் கொண்டிருக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.எவர்கள் விசுவாசங்கொண்டு,நற்கருமங்களையும் செய்து, தொழுகையை யும் நிறைவேற்றி, ஸகாத்தையும் கொடுத்தார்களோ நிச்சயமாக அத்தகையோருக்கு அவர்களுடைய கூலி அவர்களின் இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு (மறுமையில்) எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
விசுவாசங் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள். மேலும், நீங்கள் (உண்மையாக) விசுவாசங் கொண்டவர்களாக இருப்பின், வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டு விடுங்கள்.
(கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். மேலும், நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன்பட்டோருக்கு) அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்களும் (மூலத் தொகையைப்) பெற்றுக் கொள்ள முடியாதவாறு அநியாயம் செய்யப்படலாகாது.
மேலும் (கடன்பட்டவர் அதனைக் குறிப்பிட்ட நேரத்தில் திருப்பித்தர முடியாத வாறு) அவர் கஷ்டத்தையுடைய வராயிருந்தால் (கடனைத் தீர்க்கும்) வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருத்தல் வேண்டும். மேலும், (அதைக் கடன்பட்டவருக்கே) நீங்கள் தர்மம் செய்து விடுவது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.இன்னும் ஒரு நாளைப் பயந்து கொள்ளுங்கள். அதில், நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படுவீர்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலியான)தை பூரணமாகக் கொடுக்கப்படும். (அதில்) அவர்களோ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.''
இவ்வசனங்கள் எவ்வாறு வட்டி நான்கு கட்டங்களில் ஹராமாக்கப்பட்டது என்பதை விளக்குகின்றன.
முதல் கட்டமாக இறங்கிய ஸூறதுர் ரூமில் இடம்பெற்றுள்ள 39 ஆம் வசனம் வட்டியில் எந்த நன்மையும் இல்லை என்று மாத்திரம் கூறியது. அதை உண்பவருக்குரிய தண்டனையைப் பற்றி அது எதுவும் குறிப்பிடவில்லை.
இரண்டாம் கட்டமாக இறங்கிய சூறத்துன் நிஸாவின் 160 ஆம் வசனம் வட்டியை உண்டு வாழ்ந்த யூதர்களை அல்லாஹ் எவ்வாறு தண்டித்தான் என்பதை முஃமின்களுக்குப் படிப்பினையாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த வசனமும் வட்டி ஹராமானது என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. அது பற்றி மறைமுகமாக உணர்த்தியது. இந்த வசனம் வட்டியை ஹராமாக்கும் இறை கட்டளை சீக்கிரம் வரும் என்ற முன்னறிவிப்பை முஃமின்களுக்குச் சொல்லியது.
மூன்றாம் கட்டத்தில்தான் வட்டி ஹராம் என்பது மிகத் தெளிவாக கூறப்பட்டது. ஸூறா ஆல இம்ரானின் 130 ஆம் வசனம் மூன்றாம் கட்டத்தில் இறங்கியது. ஆனால் இந்த வசனமும் கூட வட்டியின் ஓர் அங்கத்தை மட்டுமே ஹராம் எனக் கூறியது. பல மடங்காக, இரட்டிப்பாக, அதிகமாக பெறப்படும் வட்டியையே இந்த வசனம் நேரடியாக தடைசெய்தது.
நான்காம் கட்டமாக இறங்கிய ஸூறதுல் பகராவின் 278 முதல் 281 வரையான வசனங்களே இனி மொத்தமாக குறைந்த - கூடிய, எல்லாவகையான வட்டியும் ஹராமானதாகும் எனக் கூறியது. இந்த வசனங்களுடன் வட்டி பற்றிய இஸ்லாத்தின் முடிவான நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.
அல்குர்ஆனைப் போன்று ஸுன்னாவும் வட்டியின் பாரதூரத்தைப் பற்றி விளக்குவதை காணமுடிகின்றது. வட்டி உண்பதை நபியவர்கள் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிட்டார்கள். இதுபற்றிய ஹதீஸ் பின்வருமாறு:
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஷஅவை யாவை? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவியபோது அண்ணலார் பின்வருமாறு விளக்கினார்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆன்மாவை நியாயமின்றிக் கொலை செய்தல், வட்டி உண்ணல், அனாதையின் பொருளைச் சாப்பிடுதல், யுத்தத்தில் புறமுதுகு காட்டுதல், கற்புடைய முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறுதல்.'' (புகாரி, முஸ்லிம்)
மேலும் நபியவர்கள் வட்டி தொடர்பான செயற்பாட்டில் சம்பந்தப்படுகின்ற அனைவரையும் அல்லாஹ் சபித்துள்ளதாக கூறுகிறார்கள்.
''அல்லாஹ் வட்டி உண்பவனையும் அதனை உண்ணக் கொடுப்பவனையும் அதற்கு சாட்சியாக இருப்போரையும் அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்.'' (புகாரி, முஸ்லிம்)
வட்டி விபசாரத்தை விடக் கொடிய பாவமாகும் எனவும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதுபற்றிக் குறிப்பிடும் ஹதீஸ் பின்வருமாறு:
''வட்டியாக பெறப்படும் ஒரு திர்ஹமானது பாவத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்விடத்தில் முப்பத்தாறு முறை விபச்சாரத்தில் ஈடுபடுவதை விடக் கொடியதாகும்.'' (தாரகுத்னி)
வட்டி விபசாரத்தை விடவும் பாரதூரமான ஒரு பாவமாக கொள்ளப்படுவதற்கு நியாயமுண்டு. ஒரு மனிதன் சலனம், சபலம் காரணமாக, சந்தர்ப்பவசத்தில், உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் விபசாரத்தில் ஈடுபடலாம். ஆனால் வட்டியைப் பொறுத்தவரையில் அது திட்டமிட்டு, தெளிவோடும், அறிவோடும் மேற்கொள்ளப்படும் ஒரு குற்றச்செயலாகும்.
அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் மட்டுமன்றி இஜ்மாவின் அடிப்படையிலும் வட்டி ஹராமானதாகும். அதாவது வட்டி ஹராமானது என்பது இஸ்லாமிய உம்மத்தின் ஏகோபித்த முடிவாக இருந்து வந்துள்ளது. இதுபற்றி இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்மஜ்மூஃ எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
'வட்டி ஹராமானதும், அது பெரும்பாவங்களில் ஒன்றுமாகும் என்பதில் முஸ்லிம்கள் ஏகோபித்த முடிவைக் கொண்டுள்ளார்கள்.'
சுபுலுஸ் ஸலாம் எனும் நூலில் இமாம் அஸ்-ஸன்ஆனி கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:
'வட்டியின் விரிவான விபரம் பற்றி கருத்துவேறுபாடுகள் நிலவியபோதும் மொத்தத்தில் அது ஹராமானது என்பது உம்மத்தின் ஏகோபித்த முடிவாகும்.'
இமாம் அஸ்ஸர்கஷீ அவர்கள் தனது அல்-மப்சூத் எனும் கிரந்தத்தில் வட்டியின் பாரதூரத்தைப் பற்றி குறிப்பிடும் கருத்து எமது கவனத்திற்குரியதாகும்.
வட்டி உண்பவர்களுக்கு ஐந்து தண்டனைகள் இருப்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவையாவன:
1. ஷைத்தான் தீண்டிய நிலையில் மறுமையில் எழுப்பப்படுதல். இதுபற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
''வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவர்களைப் போலன்றி வேறுவிதமாக எழும்ப மாட்டார்கள்.'' (ஸூறா அல்பகரா: 275)
2. சொத்து செல்வங்களில் ஏற்படும் அழிவும் இழப்பும்.
''அல்லாஹ் வட்டியை (அதில் பரகத் செய்யாமல்) அழித்து விடுகின்றான். தான தர்மங்களை வளர்த்து அபிவிருத்தி செய்கின்றான்.'' (அல்பகரா: 275)
3. அல்லாஹ்வுடனும், ரஸூலுடனும் யுத்தம் புரிதல். அல்குர்ஆன் இதுபற்றி கீழ்வருமாறு கூறுகின்றது:
''ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்;. மேலும் நீங்கள் முஃமின்களாக இருப்பின் வட்டியில் (இதுவரை நீங்கள் எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையாயின் அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் யுத்தம் செய்வதாக பிரகடனம் செய்யுங்கள்.'' (அல்பகரா: 278,279)
4. குப்ர் உண்டாகுதல்.
''ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் (இதுவரை எடுத்தது போக) எஞ்சிய வட்டியை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள்.''
5. வட்டி உண்பவருக்கு கிடைக்கும் ஐந்தாம் தண்டனை நிரந்தர நரக வேதனையாகும் என அல்குர்ஆன் எச்சரிக்கிறது.
''யார் வட்டி எடுப்பதன்பால் மீண்டும் செல்கிறார்களோ அவர்கள் நரக வாசிகளே. அதில் அவர்கள் நிலையாக இருப்பார்கள்.'' (அல்பகரா:275)
இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் வட்டியைப் பற்றி இப்படிக் கூறுகிறார்கள்:
''எவர் வட்டியை ஹலால் எனக் கூறுகிறாரோ அவர் காபிராவார். அவர் மரண தண்டனைக்குரியவராகிறார். அவருக்கு இக்குற்றத்திலிருந்து தவ்பா செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். தவ்பா செய்தால் மன்னிப்பு உண்டு. இல்லாதபோது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.''
வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது பற்றி இமாம் அல்-பாஜூரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இது பெரும்பாவங்களிலும் மிகப் பெரும்பாவங்களில் ஒன்றாகும். பொதுவாக பெரும்பாவங்களிலும் மிகப் பெரும்பாவங்களாவன: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், அல்லாஹ் தடை செய்துள்ள ஓர் ஆன்மாவை நியாயமின்றி கொலைசெய்தல், விபசாரம் செய்தல், வட்டி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடல்.
வட்டி இஸ்லாத்தில் மட்டுமன்றி தவ்றாத், இன்ஜீல் ஆகியவற்றிலும் தடை செய்யப்பட்டதாகவே இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
வட்டியின் பயங்கரத்தை எடுத்துக் கூறும் மற்றுமிரு ஹதீஸ்கள் பின்வருமாறு:
''வட்டியென்பது தொன்னூற்று ஒன்பது வாயில்களைக் கொண்டது. அதில் மிகக் குறைந்த நிலை ஒருவர் தனது தாயுடன் விபசாரம் செய்வதனைப் போன்றதாகும்.'' (அல்ஹாகிம்)
''ஓர் ஊரில் வட்டியும் விபசாரமும் பரவிவிட்டால் அவ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தம்மீது இறக்கிக் கொண்டோர் ஆவர்.''(அல்ஹாகிம்)