சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு: மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?


உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த சூழலில், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான (OBC) 27 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து 4.5 சதவீதத்தை வழங்குவதாக மத்திய அரசு, 2011 டிசம்பர் மாதம் 22ஆம் நாள் அறிவித்தது.
சிறுபான்மையினருக்கு 15 சதவீதமும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் ஆணையம் மத்திய அரசை அறிவுறுத்தியது. ஆனால் அதனை செயல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாம் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சி, அதன் இரண்டாம் ஆட்சியில் பேச மறுக்கிறது. மிஸ்ராவின் அறிக்கையை குப்பைக் கூடையில் போட்டிருக்கிறது. தற்போது கண்துடைப்பாக 4.5 சதவீத உள்ஒதுக்கீடு தருவதாகக் கூறியது. ஆனால் அதனையும் பாதுகாப்பதற்கான விதிகளை உருவாக்கவில்லை.
இந்த 4.5 சதவீதத்தில் அனைத்துப் பிரிவினருடன் முஸ்லிம்கள் போட்டியிட வேண்டும். நீதிபதி சச்சார் ஆணையம் சுட்டிக் காட்டியிருப்பது போல் முஸ்லிம்கள், தலித்துகளை விட பின்தங்கியிருப்பதால் அவர்கள் இதர பிற்பட்ட வகுப்பினரோடு எப்படிப் போட்டியிட்டுப் பங்குபெற முடியும். அது சாத்தியமற்றது.
இந்த 4.5 உள்ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் கூட முஸ்லிம்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதால் முஸ்லிம்கள் காங்கிரசின் கண்துடைப்பு ஒதுக்கீட்டை கண்டித்ததுடன் அதனை ஏற்கவும் மறுத்தனர். இந்த நிலையில்தான், ஆந்திராவின் உயர்நீதிமன்றத்தில் இந்த 4.5 சதவீதத்தை யும் எதிர்த்து வழக்குப் போடப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு உள்ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் விதிமுறைகள் எதையும் வகுக்கவில்லை. எனவே இதனை ரத்து செய்வதாக மே 28ல் அறிவித்தனர்.
இந்த ரத்து ஆணையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அμகியது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கெஹர் ஆகியோர், சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் வழங்கிய ரத்து ஆணைக்கு தடைவிதிக்க முடியாது என்று அறிவித்ததுடன், பாதுகாக்கும் விதிமுறைகள் இல்லாமல் உள்ஒதுக்கீட்டை அறிவிப்பு செய்த மத்திய அரசையும் கடிந்துகொண்டது.
மத்திய அரசின் வழக்கறிஞர் ஜி.வாகன்வதி, நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்க, ஜூன் 13ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இடஒதுக்கீட்டு அறிவிப்புச் செய்வதற்கு முன்னதாக, பிற்படுத்தப்பட்டோருக் கான தேசிய ஆணையம், சிறுபான்மை யினருக்கான தேசிய ஆணையம் ஆகிய வற்றின் முன்பு உள்ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசு வழக்கறிஞர், ஆந்திர உயர்நீதி மன்றத்தின் தடை ஆணையைத் தாக்கிப் பேசியபோது, ‘‘தவறை உங்கள் மீது வைத்துக் கொண்டு நீதிமன்றத்தைக் கோபிப்பதேன். நீதிமன்றத்தின் முன்பு பொருத்தமான ஆவணங்களை வைக்காமல் நீதிமன்றத்தை எப்படி நீங்கள் குறைகூற முடியும்’’ என்று நீதிபதிகள் விலாசியுள்ளனர். சாசன சட்டத்தின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியதால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு செல்லாது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சும்மா தேர்தல் காரணங்களுக்காக மட்டும் இதுபோன்ற இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டு, அதை நீதிமன்றம் தடை செய்துகொள்ளட்டும் என்பது போன்று பாதுகாப்பு அரண்கள் இன்றி மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்புகளை செய்வதில் யாருக்கும் நன்மை இல்லை.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கு சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, முஸ்லிம்களுக்கு எந்தவகையிலும் பயனற்றதாக ஒரு இடஒதுக்கீட்டை வழங்க முயற்சிப்பது என்பது எப்போதும் காங்கிரஸ் கையாளும் ஏமாற்று வித்தையே!