உலகமயமாக்கள் ஒரு பார்வை



ஒவ்வொரு முறையும் நமது நாட்டில் பட்ஜட் தாக்கல் செய்யப்படும் போது அந்த பட்ஜெட்டின் அடித்தளமாக உலக மயமாக்கல் - தாராளமயமாக்கல் என்ற சிந்தனையே அமைந்து வருகிறது. எனவே உலக மயமாக்கல் என்றால் என்ன? அதன் நோக்கங்களும் விளைவுகளும் எப்படிப்பட்டவை என்பதை சுருக்கமாக உணர்த்தும் அவசியம் ஏற்படுகிறது.

சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நேச உறவு வர்த்தகம் சுற்றுலா பயணங்கள் என்று தொடர்பு ஏற்பட்டு சில நூற்றாண்டுகள் தாண்டிவிட்டன. அப்போதெல்லாம் இந்த சொல் புழக்கத்தில் இல்லை. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலோ ஐம்பதுகளிலோ எழுபதுகளிலோ அல்லது எண்பதுகளிலோ இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்புதான் இச்சொல் மேற்குலக - குறிப்பாக அமெரிக்க மூளையில் கருத்தரித்தது. இந்த திடீர் கருத்தரிப்பிற்கான காரணம் என்ன?.

1948ல் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்காவும் - ரஷ்யாவும் - இருபெரும் வல்லரசுகளாக உருப்பெற்றன. உலகம் இரு துருவங்களாக பிரிந்து போகும் அளவிற்கு இந்த இரு வல்லரசுகளின் அழுத்தங்கள் உலகில் பெரும் தாக்கத்தை உருவாக்கின. அமெரிக்கா 'நேட்டோ'வின் கீழ் தனது ஆதரவு நாடுகளையும் ரஷ்யா 'வெர்ஷோ'விற்கு கீழ் தனது ஆதரவு நாடுகளையும் திரட்டியது. பொருளாதார கொள்கையளவில் இரு நாடுகளுக்கும் மத்தியில் மிகுந்த வேறுபாடு இருந்தது.

முதலாளித்தவ கொள்கையை (கேபிடலிஸம்) அமெரிக்காவும், பொதுவுடமையாக்கக் கொள்கையை (கம்யூனிஸம்) ரஷ்யாவும் வகுத்துக் கொண்டு இக்கொள்கைக்கு ஆள் சேர்க்கம் பணியில் உலக ஊடகங்களை பெருமளவு பயன்படுத்தின. அணிசேரா நாடுகளை கவர்ந்திழுக்கும் இப்போட்டியில் ரஷ்யா தோல்வி கண்டது. 1991ல் ரஷ்யாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அரசியல் ராணுவ பொருளாதார நிலைகளில் ரஷ்யா பலத்த சரிவை கண்டது. இத்தருணத்திற்காக தவமிருந்த அமெரிக்கா, உலகின் சர்வாதிகாரியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது. இதர ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவிற்கு கைகட்டி கொண்டு தொண்டு செய்யும் நிலை உருவாயின. இந்த சந்தர்பத்தில்தான் அமெரிக்கா உலகமயமாக்கல் தத்துவத்தை அறிமுகப்படுத்தியது.

அதாவது தனது நாட்டு கலாச்சாரம், திறந்த நிலை வாழ்க்கை, தான் உற்பத்தி செய்த ஆயுதங்கள் இவைகளை உலக அளவில் கொண்டு செல்வதே உலக மயமாக்கலின் நோக்கமாகும். அரசியல் மற்றும் ஆயுத பலத்தின் மூலமாக தமது கொள்கையை இதர நாடுகள் மீது திணிப்பதற்கு இந்த முதலாளிகள் தயங்குவதில்லை. மேற்படி கொள்கை வியாபாரிகளாகத்தான் 'நேட்டோவும்' இயங்குகின்றன.

பொருளாதார நிலையின் யதார்த்தம் என்ன?.

கொழுத்த செல்வத்தை தனி மனிதர்களுக்குக் கீழ் முடக்கிப்போடும் முதலாளித்துவ சிந்தனை விரிந்த பொருளாதார கொள்கை பற்றிப்பேசுவது ஆச்சரியமாக உள்ளது. வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது வளரத்துடிக்கும் நாடுகளைக் கண்டு அஞ்சும் அமெரிக்கா அங்கெல்லாம் தலையிட்டு பொருளாதாரக் கொள்கையை வகுக்கின்றது.

கல்வி, மனிதநலன், உற்பத்தித் திறன் போன்றவற்றில் கவனம் செலுத்தி அதை மேம்பட வைப்பதற்கான வழிவகைகளையோ திட்டங்களையோ வகுப்பது உலக மயமாக்கலாக இருந்தால் அதை மனதார ஏற்று நன்றி கூறலாம். ஆனால் நடப்பு அதுவல்ல. அந்நிய நாடுகளின் செல்வத்தை உறிஞ்சி தம்மை வளமாக்கிக் கொள்வதே இந்த கொள்கையின் மூலக்கரு.

ராணுவமயமாக்கல்:

உலகமாமாக்கல் விரிக்கும் வலையின் முதல் கண்ணி இதுதான். அண்டை நாடுகளுக்கிடையே பகைமையை, பய உணர்வை தூண்டி விடுவதன் மூலம் தன் உற்பத்தியில் உருவான ஆயுதங்களை அந்நாடுகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் செல்வத்தைச் சுரண்டுவது. பகைமை உணர்வுடன் இருக்கும் இரண்டு நாடுகளில் ஒரு நாட்டில் ஆயுதம் குவிக்கப்படும்போது அதை காணும் மற்றொரு நாடு அஹிம்சை தத்துவத்தைக் கடை பிடிக்காது. அந்நாட்டின் இறையான்மை அதற்கு இடம் தராது. இதுவும் ஆயுத குவிப்பிற்கான திட்டங்களோடு களத்தில் இறங்கும். இதைவிட சக்தி மிக்க ஆயுதங்களைத் தேடும். முந்தைய நாட்டிற்கு ஆயுதம் கொடுத்த மேற்குலகம் இந்த நாட்டிற்கும் ஆயுதம் கொடுக்கும். பகைமையை வேர்விட்டு வளரச் செய்வதன் மூலம் ராணுவ பலத்தை காரணமாக்கி பெரும் செல்வத்தை கொள்ளையிடுகிறது உலகமயமாக்கல்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் பேசிய ஈரானுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஈராக்கிற்கு ஆயுத உதவி செய்து - ஈரானுக்கும் - ஈராக்கிற்குமிடையே பகைமை உணர்வை வளர்த்தது அமெரிக்காதான். - ஈரானுக்கும் - ஈராக்கிற்கும் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் நடந்த போரில் ஈராக்கிற்கு பக்க பலமாக இருந்தது மேற்குலகம். அரபுலகின் பொருளாதாரம் உறிஞ்சத் துவக்கப்பட்ட காலகட்டம் அது. ஈராக்கின் பேராசை குவைத்தை ஆக்கிரமித்தபோது குவைத்திற்கு பாதுகாப்பு அரணாக வந்திறங்கியது மேற்குலகம். அமைதியாக இருந்த நாடுகள் கூட தனது ராணுவ பலத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு நிலைமையை படு மோசமாக்கி அச்ச உணர்வை ஊட்டி வளர்த்து பெரும் ஆயுத விற்பனையை துவங்கி அந்நாடுகளில் பொருளாதார பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது ராணுவ மயமாக்கல் என்ற இந்த உலகமயமாக்கல் திட்டம்.

இப்போது தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் ராணுவத்திற்காக இந்தியா பெரும் தொகையை ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் இறையான்மையை பாதுகாக்க இது அவசியம்தான் என விளக்கம் கூறும் அரசு, குடிமக்களின் வாழ்வாதார பொருட்களை உயர்த்தியோ அல்லது நிராகரித்தோ வைத்துள்ளது. இறையான்மையைப் பற்றி கவலை வரக்காரணம் என்ன?. நம்மைவிட எல்லாவகையிலும் பலவீனப் பட்டிருக்கும் பாகிஸ்தான் தானாம். எவ்வித நியாயமும் இல்லாமல் அணுகுண்டு சோதனை நடத்தியதன் மூலம் சகோதர நாட்டை உசுப்பி விட்டது நாம்தான். பதிலாக பாகிஸ்தான் அணு செயலாக்க விளக்கம் கொடுத்தது. இன்று இரு நாடுகளும் அதிதீவிர வெறுப்புணர்வில் இருக்கும்போது ராணுவமயமாக்கல் கோட்பாட்டை அமெரிக்கா திணித்துள்ளது. ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி மேற்குலக வசமாகும் என்பதை அறிய பெரும் அவகாசம் தேவைப்படாது.

ஓரு நாட்டின் நலன் வளர்ச்சி முன்னேற்றங்கள் அனைத்தும் அம்மக்கள் பெறும் கல்வியை அடிப்படையாக வைத்தே அமையும். 'எல்லோருக்கும் ஆரம்ப கல்வி அளிப்பதற்கான தகுதி இந்தியாவுக்கு இருந்தும் அது முடியாமல் போனது புதிராக உள்ளது' என்கிறார் அமர்தியா சென். பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் ராணுவச் செலவை கணிசமாகக் குறைக்க முடியும். அந்தத் தொகையை சமூக நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தலாமே - என்ற சென்னின் ஆதங்க வார்த்தைகள் எங்கோ ஒலித்து மறைந்து போகிறது.

ஐக்கிய நாட்டு சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய பெரும் நாடுகள் மட்டும் 85 சதவீத ஆயுதங்களை தெற்காசிய நாடுகளுக்கு விற்பனை செய்கின்றன. உலக மக்கள் மத்தியில் பெரும் அபாயத்தை தோற்றுவிக்கும் இந்த ஆயுத சந்தை உலக மயமாக்கல் முத்திரையில் கனத்த பங்கு வகிக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில் நுட்ப காரணிகள்தான் உலகமயமாக்களின் அடிப்படை என்று விளக்கம் கூறி உலகவலையில் (இண்டெர்நெட்) வாதம் புரியும் பலரை பார்க்கிறோம். உலகமயமாக்கல் ஓர் ஆதிக்கம் என்பதை இர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. உலகமயமாக்கல் என்ற அமெரிக்க தத்துவம் ராணுவ மயமாக்கல் என்கிற அமெரிக்காவின் மறைமுக சதியை அடிப்படையாக கொண்டதேயாகும். ராணுவத்தளங்கள் வீரர்கள் ஆயுதங்கள் இவற்றின் மீது கவனம் செலுத்தாத எந்த தத்துவமும் உலகமயமாக்கல் கொள்கையால் தூக்கி எரியப்பட்டுவிடும்.

ஆடம்பர சந்தை நுகர்வுகள்:

பசி பட்டினி வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் வறுமைக்கோட்டு வாழ்க்கை என்று திண்டாடிக் கொண்டிருக்கும் நாட்டில் அந்நிய நாட்டு முதலாளிகளின் ஆடம்பர உற்பத்திப் பொருட்கள் அணிவகுக்கின்றன. இந்த அணிவகுப்பிற்கு ஆட்சியாளர்கள் வாசல் திறந்து விடுகிறார்கள். பெப்ஸி கோகோ-கோலா போன்ற குளிர்பானங்கள் முதல் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், பெண்கள் பயன்படுத்தும் சாதனங்கள் என்று உலகமயமாக்கலின் வழியே உள்ளே நுழையும் அந்நிய நாட்டு முதலாளிகள் வசதியாக இந்தியாவைச் சுரண்டுகின்றனர்.

தொலைக்காட்சி ஒளித்திரைகளை ஆக்கிரமிக்கும் பிரம்மிப்பூட்டும் விளம்பரங்கள் பேஷன் ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் தாக்கம் பட்டி - தொட்டியெல்லாம் எட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

வறுமைக்கோட்டு மக்களையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மறக்கடித்துவிட்ட இந்த உலகமயமாக்களின் விளம்பர யுக்திக்கு பலியான நடுத்தரவர்க்கத்தினர் தனியார் முதலீட்டு நிறுவனங்களை நம்பி கோடிக்கணக்கான பணத்தை இழந்து செய்வதறியாது தவித்து நின்ற சோகக் காட்சிகள் அவ்வளவு விரைவில் நம் கண்களை விட்டு அகலாது.

தனது சந்தை வருமானத்தை வளப்படுத்தும் உலக மய முதலாளிகளின் நவீன யுக்திதான் மூன்று முறை உலக அழகிகளை இந்தியாவிலிருந்து கண்டெடுத்தது. சிவந்த நிறத்தோடு உலக அறிவுமிக்க படித்த மேனி திறந்த கலாச்சாரத்திற்குச் சொந்தக்கார பெண்கள் மேற்குலகத்தில் இல்லையா?. இருக்கிறார்கள். உலக சுற்றுலா சுகவாசிகளிடம் சுரண்டுவதற்காக அழகிய பெண் பண்ணைகளை உருவாக்கும் இவர்களிடம் உலக அழகியா இல்லாமல் போவாள்?. நிச்சயமாக இருப்பாள். இருந்தும் அழகால் கல்வியால் நிறத்தால் கலாச்சாரத்தால் மிகவும் பின்தங்கிய இந்தியாவின் மிகவும் பின்தங்கிய தொடர் அழகிகளை தேர்வு செய்வதற்கு காரணம் பொருளாதார சுரண்டல் திட்டத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்கத்திய வன்ஆதிக்க நாடுகள் அழகியை புகழ்ந்து தங்களது ஊடகங்ளில் நான்கைந்து கட்டுரைகள் மற்றும் அழகிகளின் பேட்டிகளை வெளியிட்டவுடன் - அவர்களின் வியாபாரம் கலை கட்டிவிடும். இயற்கை வளமிக்க இந்தியா உலகமயமாக்கல் என்ற பெயரில் போதிய அளவு சுரண்டப்படும் வரை தொடர்ந்து உலக அழகிகள் தொடர்ந்து இந்தியாவிலேயே பிறக்கலாம். அவ்வாறு பிறப்பதில் வியப்பொன்றுமில்லை.

கலாச்சார மாற்றங்கள்:

சில காலங்களுக்கு முன் பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானம் அவர்களின் கலாச்சார கொள்கையை வெட்ட வெளிச்சமாக்கியது. ஆணோடு ஆண் பெண்ணோடு பெண் ஆணோடு பெண் என்கிற பாலியல் வக்கிரம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. திருமணத்தின் மூலமோ அல்லது திருமணம் இன்றியோ எவரும் - எவரோடும் பாலியல் தொடர்பு கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. சட்டப்பூர்வமாக இல்லாத அல்லது சட்டப்பூர்வமாக பிறக்காத குழந்தைகளை 'காதல் குழந்தை' என்ற அடைமொழியால் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தீர்மானம் சொன்னது.

தெளிவான வார்த்தையில் சொல்வதென்றால் 'பாலியல் வேட்கைக்கு' கட்டுப்பாடோ சட்ட அங்கீகாரமோ வயது வரம்போ நேரம் காலமோ இன பாகுபாடோ அவசியமில்லை. எங்கும் எப்போதும் எப்படியும் அந்த பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே மேற்கத்தியர்களின் பாலியல் தத்துவமாகும். இந்த தத்துவத்தை உலக அளவில் விரிப்பது உலகமயமாக்கலின் இன்னொரு கோணமாகும்.

'பேஷன் ஷோக்கள்' அழகு சாதன பொருட்கள் என்று இ,ந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கவர்ச்சி திட்டங்கள் திறந்த பாலியல் கலாச்சாரத்திற்கான முன்னோட்டங்களாகும். இந்தியாவை ஆக்கிரமித்து வரும் முதலாளித்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்போர் இதை அப்பட்டமாக உணர முடியும்.

உலகமயமாக்கல் என்ற பேர்வையில் இந்திய மற்றும் அரபுலக கண்ணியமிக்க குடும்ப அமைப்பை சீர்குலைத்து குடும்ப கூட்டமைப்பை உடைத்து ஒவ்வொருவரையும் தனிமரமாக ஆக்கிவிடும் அமெரிக்காவின் தொண்டு செயலாக்கம் பெறத் துவங்கியுள்ளது.

உலகமயமாக்கல் என்பது மேற்குலக சர்வாதிகாரியாகவும் இதர நாடுகளை சேவை செய்யும் மற்றும் கட்டுப்படும் அடிமை நாடுகளாகவும் நிலைபெறச் செய்து அந்நாடுகளை உறிஞ்சி உண்ணுவதற்கான மொத்தத் திட்டமாகும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலக நிகழ்வுகளை ஊன்றி கவனிப்போர் உலக மயமாக்கலின் அபாயத்தை உணரலாம். ராணுவமயமாக்களால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட ஈராக் போஸ்னியா கொஸோவோ போன்ற நாடுகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

தாராளமயமாக்கல் என்ற பெயரில் கடினமான பொருளாதார நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்ட ந்தோனேஷியா மலேசியா பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகக் காணலாம்.

கலாச்சார மாற்றங்களால் பெருகிவரும் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பெண்களுக்கெதிரான வன்முறை சீர்குலையும் கூட்டு சமூக உறவுகள் - இப்படியாகத் தொடரும் உலகமயமாக்கலின் பார்வை இந்தியாவைத் தொட்டுள்ளது. செயற்கையில் நம்மை மூழ்கடித்து இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் திட்டம். இப்போதே நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் உலக வரலாற்றிலும் உலக வரை படத்திலும் உலகமயமாக்கலால் திவாலாகிப்போன நாடு இந்தியா என்பது பளிச்சென வரையப்பட்டிருக்கும்.