மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்.
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.
